தலச்சிறப்பு |
ஒரு சமயம் பரத்வாஜ முனிவருக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர் வலியன் என்ற கருங்குருவியாக ஆனார். தமக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விடுபட அவர் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். அதனால் இத்தலத்திற்கு 'திருவலிதாயம்' என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்து இறைவன் 'வலிதாயநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
அக்கால அரசர்கள் போருக்கு செல்லும்போது அவர்களது படைவீரர்கள் தங்குவதற்கு வீடு அமைப்பார்கள். அந்த இடம் படைவீடு என்று வழங்கப்படும். அவ்வாறு போர்வீரர்கள் தங்கிய படைவீடாகிய இந்த இடம் காலப்போக்கில் 'பாடி' என்று மருவி வழங்கலாயிற்று. மேலும் வீரர்கள் போருக்கு செல்லுமுன் கொற்றவையான காளி தேவியை வழிபட்டு செல்வார்கள். அதற்கு சான்றாக பாடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் படவேட்டம்மன் கோயில் (படைவீட்டம்மன் என்பதன் மருவு) இன்றும் உள்ளது.
மூலவர் 'வலிதாயநாதர்', 'திருவல்லீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'தாயம்மை', 'ஜெகதாம்பிகை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், நால்வர், அருணகிரிநாதர், சோமாஸ்கந்தர், அனுமன் வழிபட்ட லிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரத்வாஜ லிங்கம், நாக தேவதைகள், நடராஜர், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
கோபுரத்தை ஒட்டி குரு பகவானுக்கும், நவக்கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனை குரு பகவான் வழிபட்டதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக வணங்கப்படுகிறது. இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
குரு பகவான், பரத்வாஜ முனிவர், அனுமன், இந்திரன், சூரியன், சந்திரன், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|